பல் ஆஸ்பத்திரியில் பணம்-மடிக்கணினி திருட்டு
நாகர்கோவிலில் ஓமியோபதி கிளினிக்கை தொடர்ந்து பல் ஆஸ்பத்திரியிலும் பணம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகா்கோவில்,
நாகர்கோவிலில் ஓமியோபதி கிளினிக்கை தொடர்ந்து பல் ஆஸ்பத்திரியிலும் பணம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.
பல் ஆஸ்பத்திரியில் திருட்டு
நாகர்கோவில் மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 20-ந் தேதி நாகர்கோவில் கேப் ரோட்டில் உள்ள ஒரு ஓமியோபதி கிளினிக்கின் கதவை உடைத்து அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்மஆசாமி திருடி சென்றார்.
முகமூடி அணிந்தபடி அவர் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் இதுதொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையனை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் அதேபோன்று மீண்டும் மாநகரில் உள்ள ஒரு தனியார் பல் ஆஸ்பத்திரியில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் தேவகுமார் (வயது 38), பல் டாக்டர். இவர் செட்டிகுளம் சந்திப்பில் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.
பணம்-மடிக்கணினி
சம்பவத்தன்று இரவு தேவகுமார் பணிகளை முடித்து விட்டு ஆஸ்பத்திரியை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது ஆஸ்பத்திரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவகுமார் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்ற கொள்ளையனை தேடி வருகிறார்கள். அதே சமயத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியின் பூட்டை உடைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
முகமூடி கொள்ளையன்
ஏற்கனவே ஓமியோபதி கிளினிக்கில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையன் தான், இந்த பல் ஆஸ்பத்திரியிலும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என போலீசாா் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் கொள்ளையனை பிடிக்க கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் முகமூடி கொள்ளையனை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.