கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல்
சின்னதச்சூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தொிவித்தனா்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தாலுகா தெ.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த வள்ளி, வீரம்மாள், சாந்தி, சந்திரா, தண்டபாணி, விநாயகம், வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 7 பேரும் சின்னதச்சூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களது கணக்கில் வரவு வைப்பதற்காக அங்கு பணிபுரியும் ஒருவர் மூலம் பணம் செலுத்தினோம். நாங்கள் செலுத்திய மொத்த தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரமாகும். இதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. இந்நிலையில் எங்களது கணக்கிலுள்ள தொகையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்க சென்றபோது, உங்களது கணக்கில் பணம் இல்லை என அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கணக்காளரிடம் கேளுங்கள் எனக்கூறிவிட்டார். எனவே கூட்டுறவு கடன் சங்கத்தில் நாங்கள் செலுத்திய பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தனர்.