சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கு பதிவு செய்யும் அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி வழக்கு- மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கு பதிவு செய்யும் அறிவிப்பை வாபஸ் பெறக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை செய்யப்படுகிறது.

Update: 2023-05-03 20:29 GMT


மதுரையைச் சேர்ந்த கனகேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் தற்போது சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்த விழாவின்போது பக்தர்களுக்கு பல வகையான சாதங்கள் மற்றும் அன்னதானம் செய்பவர்கள், பிரசாத உபயதாரர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. இச்சட்டத்தின் கீழ் தினசரி ரூ.3 ஆயிரத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்தான் இதற்காக பதிவு செய்து லைசென்சு பெற வேண்டும். எனவே சித்திரைத்திருவிழாவையொட்டி அன்னதானம், பிரசாதம் வழங்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்ததற்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு விசாரணையில் இன்று(வியாழக்கிழமை) விசாரிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்