கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு தடை கோரி வழக்கு

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு பட்டியல் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு குறித்து உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-29 20:40 GMT

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு பட்டியல் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு குறித்து உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வு வழக்கு

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வரும் ராமகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக காவல்துறையில் நேரடி சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அதன் பின்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றேன். தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டாக சேரன்மாதேவி கோட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.

தற்போது காவல்துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு பெறுவதற்கான தற்காலிக பட்டியல் தயார் செய்யப்பட்டது. மொத்தம் 47 பேர் கொண்ட அந்த பட்டியலில் 22-வது இடத்தில் எனது பெயர் இருந்தது.

அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்

இந்த நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றவர்களின் பட்டியல் தொடர்பான அரசாணையை கடந்த மாதம் 30-ந்தேதி கூடுதல் தலைமைச்செயலாளர் வெளியிட்டார். இந்த பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. பணி மூப்பு பட்டியலில் என்னை விட அனுபவம் குறைந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் தொடர்பான விதிகளின்படி இது தவறு. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே துணை போலீஸ் சூப்பிரண்டுகளை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுவாக பதவி உயர்வு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிப்பதுடன், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தற்காலிக பட்டியலின் அடிப்படையில் எனது பெயரையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுவாக பதவி உயர்வு பெற்றவர்கள் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பரிசீலிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது கோரிக்கையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பரிசீலித்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்