கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-20 06:38 GMT

கரூர்,

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் திருவிக என்பவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது காலை 11 மணியளவில் வேடசந்தூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் சிலரால் திருவிக கடத்தப்பட்டதாகவும், பின்னர் மாலை 6 மணியளவில் கல்வார்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே அ.தி.மு.க.வினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று மதியம் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கூட்டம் கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்