குளத்தில் புதிதாக கட்டிய பக்க சுவர் இடிந்த விவகாரம்:பா.ஜனதாவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்

கடையால் பேரூராட்சியில் குளத்தில் புதிதாக கட்டப்பட்ட பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பா.ஜனதாவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பேரூராட்சி தலைவி, கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-14 17:12 GMT

அருமனை, 

கடையால் பேரூராட்சியில் குளத்தில் புதிதாக கட்டப்பட்ட பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பா.ஜனதாவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பேரூராட்சி தலைவி, கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இடிந்து விழுந்த பக்க சுவர்

கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட களியலில் புதுக்குளம் உள்ளது. இந்த குளம் சமீபத்தில் ரூ.38 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டு பக்க சுவர் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த 2 மாதத்தில் பக்கச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பணிகள் தரமற்ற முறையில் செய்ததாக பா.ஜனதாவினர் இடிந்த பக்க சுவரில் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடையால் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சலாமத் இடிந்த பக்க சுவரை பார்வையிட சென்றார். அப்போது அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவி ஜூலியட், அவருடைய கணவரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான சேகர் ஆகியோர் வந்தனர்.

வாக்குவாதம்-மோதல்

அப்போது பேரூராட்சி தலைவி ஜூலியட், அவருடைய கணவர் சேகர் மற்றும் கவுன்சிலர் சலாமத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவி ஜூலியட் கடையால் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கவுன்சிலர் சலாமத், தன்னையும், தனது கணவரையும் தாக்கியதாக கூறியுள்ளார்.

இதுபோல் சலாமத் கொடுத்த புகாரில் 'பேரூராட்சி தலைவி ஜூலியட் அவருடைய கணவர் சேகர் ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

இந்த புகார்களின் அடிப்படையில் பேரூராட்சி தலைவி ஜூலியட், அவருடைய கணவர் சேகர் மற்றும் கவுன்சிலர் சலாமத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்