பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு:உதவி பொறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்- கட்டிட பணியை விரைந்து முடிக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான வழக்கில் உதவி செயற்ெபாறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தொடர்பான வழக்கில் உதவி செயற்ெபாறியாளர்கள் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்தேன். அதன் பேரில் 2017-ம் ஆண்டில் எனக்கு உரிய உத்தரவு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மஜீத், சுப்புராஜ் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். மஜீத்தின் உறவினரான கட்டிட காண்டிராக்டர் சித்திக் உங்களுக்கு வீடு கட்டி தருவார் என்று கூறி, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றனர். அந்த வீடு பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மானியத்தொகை ரூ.1 லட்சம் மட்டும் 2 தவணையாக வழங்கப்பட்டது. பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தாமதத்துக்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து இழப்பீடு பெற்று தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அதிகாரிகளின் பணி
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, மானிய திட்டத்தின் கீழ் உத்தரவுகளை வழங்குவதும், நிதி அளிப்பதும் மட்டும்தான் அதிகாரிகள் பணி. மனுதாரரின் வீடு முழுமை அடையாததால் மீதமுள்ள தொகை வழங்கப்படவில்லை என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
ஏழைகள் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தின் கீழ் மானிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் மனுதாரர் வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தற்போது ஓய்வு பெற்று விட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள்தான் இந்த வீடு பாதியில் நிற்பதற்கு காரணம் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ.50 ஆயிரம் அபராதம்
எனவே மனுதாரரின் வீடு கட்டுமான பணிகளை விரைவாக முடிப்பதற்கு நெல்லை குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் உதவி செய்ய வேண்டும். உதவி செயற்பொறியாளர்கள் மஜீத், சுப்புராஜ் ஆகியோர் ஆஜராகும்படி இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முறையாக கடைபிடிக்கவில்லை என்பதால் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை அவர்களிடம் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் வசூலித்து, மதுரை கலைஞர் நூலகத்திற்கு செலுத்த வேண்டும்.
கிரிமினல் வழக்கு
உதவி செயற்பொறியாளர்கள் மஜீத், சுப்புராஜ் ஆகியோர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்களா? என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும். அவர்களால் மனுதாரரை போல வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானால், 2 பேர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும். இந்த திட்டம் முறையாக தகுந்த பயனாளிகளிடம் சென்று சேர்கிறது என்பதை மத்திய-மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.