அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு - பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.;
மதுரை,
திருநெல்வேலி திருநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருநெல்வேலி திருநகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு விண்ணப்பித்து, தேர்வு செய்யப்பட்டேன்.
செயற்பொறியாளரின் உறவினர் ஒருவர் மூலம் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்ய வைத்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நான்கு தவணையாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர். வீட்டின் ஆரம்பப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு தவணையாக 1 லட்சம் ரூபாய் பெற்றேன். இதில் ஒப்பந்ததாரர் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீதி தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த அபராதத் தொகையை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து திட்டம் முறையாக பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.