பயணிகளின் உடைமைகளை ஒப்படைக்க தவறியதாக வழக்கு; இண்டிகோ விமான நிறுவனம் ரூ.70,000 வழங்க உத்தரவு
விசாரணையில் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் உடைமைகளை விமானத்தில் ஏற்றத் தவறியது உறுதியானது.;
பெங்களூரு,
கர்நாடகாவைச் சேர்ந்த வேதவியாஸ்-சுரபி தம்பதியினர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி, விடுமுறையை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர். ஆனால் அவர்கள் போர்ட் பிளேர் சென்றடைந்த பின்னர், அவர்களது உடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய உடைமைகள் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை.
இது குறித்து விமான நிறுவனத்திடம் கேட்டபோது, அடுத்த நாள் அவர்களது உடைமைகள் வந்து சேரும் என கூறப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 3-ந்தேதி அந்த தம்பதியினரின் உடைமைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்ற இடத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, இது தொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இண்டிகோ நிறுவன ஊழியர்கள் உடைமைகளை விமானத்தில் ஏற்றத் தவறியது உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இண்டிகோ நிறுவனம் ரூ.70,000 வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.