மத மோதலை ஏற்படுத்துவதாக வழக்கு: 12 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மத மோதலை ஏற்படுத்துவதாக 12 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது .
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அச்சங்குட்டத்தில் கடந்த 1928-ம் ஆண்டில் இருந்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கிறிஸ்தவ நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்தது. இந்தநிலையில் அந்த பள்ளி கட்டிடம் பழமையானதால் 2018-ம் ஆண்டில் மற்றொரு இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்ட முடிவு செய்ததற்கு அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பள்ளியில் படித்த 76 மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை பெற்றுக்கொண்டதாக அப்பகுதி தாசில்தார் சுரண்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அச்சங்குட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக ராஜேந்திரன் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு 12 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நாங்கள் மத ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை. அரசுப்பள்ளி கோரி கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளோம். எங்கள் மீது வருவாய் அதிகாரிகளிடம் பொய்யான புகாரைப்பெற்று போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி வழங்குவது அவசியம். ஆனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது சட்டவிரோதம். இதுசம்பந்தமாக அவர்களின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மனுதாரர்களில் செயல்பாடுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகும் நிலை உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 12 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.