ராஜாக்கூரில் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்யக்கோரி வழக்கு

ராஜாக்கூரில் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்யக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-04-18 20:48 GMT

மதுரையைச்சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ராஜாக்கூரில் 3 பிரிவுகளாக ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகள் உரிய நபர்களுக்கு ஒதுக்கப்படாமல் நீண்ட காலமாக காலியாக உள்ளன. நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இப்பகுதிக்கு முறையான சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே இப்பகுதிக்கு முறையான சாலை, தெருவிளக்கு மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். புறக்காவல் நிலையம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நிர்ணய தொகையை தவணை முறையில் வசூலிக்கும் வகையில் வீடுகளை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர், ஊரக வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்