திருப்பதி வஸ்திர சேவை தொடர்பாக பக்தர் தொடர்ந்த வழக்கு - ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

இந்த தீர்ப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அளவிலும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-04 17:09 GMT

சேலம்,

இந்தியாவின் பணக்கார கோவில் என வர்ணிக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் லட்சக்கணக்கணக்கில் காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு நடைபெறும் வஸ்திர சேவை மூலம் பக்தர்கள் தாங்கள் விரும்பி வணங்கும் ஏழுமலையானுக்கு மேலாடை சமர்ப்பித்து தரிசனம் செய்ய முடியும்.

இருப்பினும் இதற்கான கட்டணத்தை செலுத்தினாலும் உடனடியாக வஸ்திர சேவையை நிறைவேற்ற முடியாது. ஏனெனில் திருப்பதியில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு வஸ்திர சேவை ஏற்கனவே பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வஸ்திர சேவைக்காக சேலத்தைச் சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். அவருக்கு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் கட்டண சேவைக்காக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும், அவர்கள் வேறு நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்தது.

மேல் சாத்து வஸ்திர சேவைக்காக 17 வருடங்கள் காத்திருந்த ஹரிபாஸ்கர் இந்த அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இது தொடர்பாக விசாரணை கோரி சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒருவருட காலத்திற்குள் மனுதாரர் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அவர் தரிசனத்திற்காக செலுத்திய தொகையை 2 மாதத்திற்குள் திருப்பி அளிக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அளவிலும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிபாஸ்கருக்கு இழப்பீடு வழங்கினாலோ அல்லது வஸ்திர சேவைக்கு அனுமதி வழங்கினாலோ, இதே போல் பிற பக்தர்களும் கோரிக்கை விடுக்க வாய்ப்பிருப்பதால் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்