குன்னம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

குன்னம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-22 19:16 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கருபட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 36) என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த பழனிவேல் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கேட்டதாகவும், பின்னர் பணம் கொடுத்துவிட்டு சில்லறை கொடுக்க காலதாமதம் ஏற்பட்டதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பழனிவேலை தாக்கி உள்ளனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என்ன நடக்கிறது என்று தெரியாமலும், கேள்வி கேட்காமலும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் பழனிவேலை தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சங்கர், பழனிவேலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் குன்னம் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி விசாரணை நடத்தினார். இதில், கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த வினோத் (30), சிவராஜ் (16), அஜித் (23), அய்யப்பன் என்கிற பூவரசன் (27), முத்துக்குமார் (35) ஆகியோர் பழனிவேலை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்