2 இளம்பெண்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விக்கிரமங்கலம் அருகே 2 இளம்பெண்களை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-11 18:30 GMT

நிலப்பிரச்சினை

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழ கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் சுந்தரி (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் இவரது உறவினர் செல்வராஜ் (55). இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ராமமூர்த்தியின் பம்ப் செட்டிற்கு மின்சாரம் வராததால் இது சம்பந்தமாக ராமமூர்த்திக்கும் செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு ராமமூர்த்தியின் வீட்டிற்கு வந்த செல்வராஜ் மற்றும் இவரது உறவினர்களான சவுந்தர்ராஜன், சிவராமகிருஷ்ணன் சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் ராமமூர்த்தி எங்கே என்று சுந்தரியிடம் கேட்டுள்ளனர்.

4 பேர் மீது வழக்கு

அதற்கு அவர் தனது தந்தை வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் அவர்கள் ராமமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது சுந்தரி மற்றும் இவரது அக்காள் சுகன்யா (23) ஆகியோர் ஏன் எங்களது தந்தையை திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரும் சுந்தரி, சுகன்யா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுந்தரி மற்றும் சுகன்யா ஆகியோர் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன், 2 இளம்பெண்களை தாக்கிய செல்வராஜ் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்