விதியை மீறி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு
சிவகாசியில் விதியை மீறி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விதிமீறல்கள் இருப்பதாக புகார் வந்தவண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள் அவ்வபோது திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் காசிராஜன் மற்றும் போலீசார் வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் மரத்தடி உள்பட பல்வேறு இடங்களில் அமர்ந்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையின் உரிமையாளர் கார்த்திகேயன், போர்மென் முனியசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.