போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை மீது வழக்கு
போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு பள்ளியில் ஆசிரியை
திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சிங்கராயர். இவருடைய மனைவி சகாயசுந்தரி (வயது 49). இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். தற்போது மண்ணச்சநல்லூர் மூவாரம்பாளையம் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சகாயசுந்தரியும் தனது கல்விச் சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்துக்கு அனுப்பினார்.
வழக்கு
அங்கு சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என்றும், போலி சான்றிதழ்களை கொடுத்து 25 ஆண்டாக அவர் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுகாயசுந்தரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி பரிந்துரை செய்தார்.
மேலும் இது குறித்து அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் புகார் அளித்தார். அதன்பேரில், சுகாயசுந்தரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலி சான்றிதழ் கொடுத்து 25 ஆண்டுகள் ஆசிரியையாக சகாயசுந்தரி பணியாற்றி வந்த சம்பவம் கல்வி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.