பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

Update: 2023-08-10 19:35 GMT

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பாளையங்கோட்டை கோரிபள்ளத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி (வயது 41) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததாக கூறி, பிளஸ்-1 மாணவர்கள் 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை சக மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும், ஆசிரியர் கிங்ஸ்லி தாக்கியதில் காயமடைந்த 3 மாணவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மாணவர்களை அவதூறாக பேசி, தாக்கியதாக ஆசிரியர் கிங்ஸ்லி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் கிங்ஸ்லியிடம் பள்ளிக்கூட நிர்வாகம் விளக்கம் கேட்டு இருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் கிங்ஸ்லியை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கூட நிர்வாகம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்