போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர் மீது வழக்கு
நெல்லையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முபாரக் அலி (வயது 51). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு சென்றார். பின்னர் அவர் இந்தியா திரும்பவில்லையாம். ஆனால் அவர் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயன்ற போது முபாரக் அலி போலி முகவரிகளை கொடுத்து பாஸ்போர்ட் எடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி முபாரக் அலி, அவரின் உறவினரான காஜா மைதீன் (57) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.