அடுக்குமாடி குடியிருப்பில் விதி மீறிய கட்டுமானங்களை எதிர்த்து வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி

விதிமீறல்கள் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்று விடலாம் என ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

Update: 2022-11-07 10:17 GMT

சென்னை,

சென்னை, கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி விஜயபாஸ்கர் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, விதிமீறல் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், மனுதாரரின் தரைதளத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாக கூறி அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் அதனை அகற்றக்கோரி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், சுரேஷ்பாபு அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை ஆண்டுகள் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டபின் திடீரென விழத்துக்கொள்ள காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர்.

மேலும், கட்டிடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், விதிமீறி கட்டப்பட்ட 3-வது தளத்தை தவிர்த்து மற்ற இரு தளங்களுக்கும் தரை தளத்துக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என உத்தவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டிடத்திற்கு சீல் வைத்த போது இருந்த அதிகாரிகள் பட்டியல் நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கட்டிடத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக கடந்த அக். 28- ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையரை ஆஜராக உத்தரவிட்டதால் தான் நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை பசுமைவழிச்சாலை அருகே விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆண்டுகளாக உள்ளது. விதிமீறல்கள் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், விதிமீறல் கட்டிடத்தை சரி செய்ய மனுதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்