காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரிய வழக்கு தள்ளுபடி

காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2022-08-18 20:30 GMT

காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பணைகள் கட்டக்கோரி மனு

திருச்சி உத்தமசீலியைச் சேர்ந்த விஜயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கிறது. உத்தமசீலி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்புதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் இடையே தடுப்பணைகளை அமைத்தால் இப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.

இப்பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை ராட்சத ஆழ்குழாய் மூலமாக உறிஞ்சி எடுத்து விற்பனை செய்கின்றன. இந்த பகுதியில் 2 தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தோம். எங்கள் மனுவை திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நிராகரித்துவிட்டார்.

எனவே திருச்சி காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர் புதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் கிராமத்திலும் தடுப்பணைகள் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதுபோன்ற கோரிக்கைகளில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும்தான் முடிவு எடுக்க வேண்டும். அப்பகுதியின் கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டால் பல பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், அரசின் பணிகளை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. அந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள்தான் தடுப்பணை கட்டுவது குறித்து பரிந்துரைக்க வேண்டும். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்