ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 6 பேர் மீது வழக்கு
வேலூரில் நடந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் ரூ.1¼ லட்சம் சிக்கியது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் நடந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் ரூ.1¼ லட்சம் சிக்கியது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.1¼ லட்சம் சிக்கியது
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்குள்ள கூட்டரங்கில் கடந்த 15-ந்தேதி 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுத்து தங்கள் கிராம ஊராட்சியின் தணிக்கையை சரிசெய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் மாலை 3 மணியளவில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 600 சிக்கியது. அதைத்தொடர்ந்து போலீசார், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடேசனிடம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தணிக்கையை சரி செய்வதற்காக ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுத்தார்களா என்றும், கிராம ஊராட்சி செயலாளர்கள் கணக்கில் வராமல் வைத்திருந்த பணம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடைபெற்றது.
6 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரியா வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் ரூ.1¼ லட்சம் சிக்கியது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடேசன், சமூக தணிக்கைக்குழு உதவி திட்ட அலுவலர் வசுமதி, சமூக தணிக்கை அலுவலக வள அலுவலர் மணிமாறன், பத்தலப்பள்ளி ஊராட்சி செயலாளர் மணிவண்ணன், மசிகம் ஊராட்சியை சேர்ந்த ஆறுமுகம், துத்திக்காடு ஊராட்சி சுகாதார ஊழியர் திருமலை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய் தணிக்கை தடை நிவர்த்தி செய்ய லஞ்சமாக பணம் கேட்டும், அதனை வசூல் செய்தும், லஞ்சம் கொடுக்க பணம் வைத்திருந்ததாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் வெங்கடேசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.