வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டுமனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்,
சிதம்பரம் அடுத்த புவனகிரி தில்லைநகரை சேர்ந்தவர் மகேஷ்(வயது 40). இவருக்கும் கொளக்குடி கிராமத்தை சேர்ந்த அனுராதா(35) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் மகேஷ் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதுடன், தனது தந்தை ராதாகிருஷ்ணன், தாய் சித்ரா, உறவினர் வேல்முருகன், பிரபா ஆகியோருடன் சேர்ந்து அனுராதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனுராதா தனக்கு திருமணத்தின்போது வழங்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை திருப்பி தருமாறு மகேசிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேஷ் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அனுராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மகேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுராதா புவனகிரி தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.