பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சில்லறை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணல்மேடு:
சில்லறை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தகராறு
சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பஸ்சின் கண்டக்டராக திருவிடைமருதூர் தாலுகா விளாத்தொட்டியை சேர்ந்த மோகன் (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த பஸ்சில் பயணம் செய்த சேத்துரைச் சேர்ந்த ராஜி என்பவருக்கும் கண்டக்டர் மோகன் என்பவருக்கும் சில்லறை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ராஜி தனது குடும்பத்தினருடன் மன்னிப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக பஸ் கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சீர்காழி நோக்கி வரும் பொழுது ராஜி அவரது ஆதரவாளர்களுடன் சேத்தூர் அருகே மன்னிப்பள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி பஸ்சை வழிமறித்துள்ளார்.
தாக்குதல்
மேலும் பஸ்சின் உள்ளே ஏறி கண்டக்டர் மோகனை கடுமையாக தாக்கியதுடன் தொடர்ந்து கண்டக்டரை கீழே இழுத்து வந்து சாலையில் வைத்து தாக்கியுள்ளார். சுமார் 10க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கண்டக்டர் மோகன் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தாக்குதல் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கண்டக்டர் மோகன் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் மன்னிப்பள்ளம் மற்றும் சேத்தூர் பகுதியை சேர்ந்த சிவசிதம்பரம், ராஜி, இயேசு பிரதாப், புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.