டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
சரவணம்பட்டி
சரவணம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த 22 வயது வாலிபர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கீரணத்தம் மற்றும் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை பணி முடிந்ததும் வேனில் அழைத்து செல்வது வழக்கம். இதில், குனியமுத்தூரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன், டிரைவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அப்போது, டிரைவர் அந்த பெண்ணுக்கு ரூ.3 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதனை திருப்பிக்கேட்டபோது, அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று டிரைவர் கீரணத்தம் தொழில்பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 3 பேர் திடீரென டிரைவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி ஐ.டி. பெண் ஊழியரின் நண்பர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.