தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
நகை, பணம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 44). இவரது உறவினர் கபிலன் மதுரையில் வசிக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடகை வீட்டில் இருந்து ஒத்திக்கு வீடு பார்த்துள்ளதாக கூறி, சசிகலாவிடம் ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல தனது மகள்களின் படிப்பு செலவு, திருமணம் எனக்கூறி சசிகலா வைத்திருந்த 42 பவுன் நகைகள், பல லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றையும் பல தவணைகளாக பெற்றுள்ளார். இவற்றை திருப்பி தருவதாக கூறியிருந்தார். சமீபத்தில் தனக்கு பணத்தேவை உள்ளது. அதனால் தன்னிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பி தருமாறு கபிலனிடம் சசிகலா கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்து, சசிகலாவுக்கு கபிலன் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மதுரை மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் சசிகலா மனு மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி செல்லூர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கபிலன், அவரது மனைவி தமிழ்செல்வி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.