தண்ணீர் திருடிய 2 பேர் மீது வழக்கு
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பொள்ளாச்சி
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 20-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதையொட்டி அணையில் இருந்து பி.ஏ.பி. பிரதான கால்வாயில் வினாடிக்கு 900 கன அடிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
2 பேர் மீது வழக்கு
இதற்கிடையில் குழாய் அமைத்து பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திருடுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் இரவு நேரங்களில் கால்வாய்களில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் துறை, போலீசார், பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. அதன்படி கால்வாயை சேதப்படுத்தி குழாய் அமைத்து தண்ணீர் திருடியதாக கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று தண்ணீர் திருடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.