சார் பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

போலி கையெழுத்திட்டு நிலம் விற்பனை செய்ததில் சார் பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-02 22:30 GMT

சாணார்பட்டியை அடுத்த திம்மநல்லூர் டி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). இவர், தெலுங்கானா மாநிலத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக திம்மநல்லூரில் நிலம் உள்ளது. அந்த நிலம் வெங்கடேசனுக்கு தெரியாமல் வேறு ஒருவர் மூலம் வெங்கடேசனின் கையெழுத்தை போலியாக போட்டு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த வெங்கடேசன் மாவட்ட சார் பதிவாளரிடம் புகார் கொடுத்தார்.

மேலும் திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலி கையொப்பமிட்டு நிலத்தை விற்றது வெங்கடேசனின் தாய் மற்றும் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. இதையடுத்து திம்மநல்லூரை சேர்ந்த தாய் ராஜம், அண்ணன் சரவணன், அக்காள் பாக்கியலட்சுமி, உறவினர் ஆறுமுகம், நிலத்தை வாங்கிய திம்மநல்லூரை சேர்ந்த கார்த்திகா, சாட்சி கையொப்பமிட்ட மதுரை தத்தனேரியை சேர்ந்த கந்தவேல், திம்மநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ், சார்பதிவாளர் ஜெகன் கருப்பையா, திண்டுக்கல்லை சேர்ந்த பத்திர எழுத்தர் பாலசுப்பிரமணியன், ராஜா ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்