வாகன பழுது பார்க்கும் பட்டறை உரிமையாளரை தாக்கிய 4 வாலிபர்கள் மீது வழக்கு
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரத்தான் கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் அந்த பகுதியில் வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வெங்கடேசன் கடையில் இருந்த போது, மது போதையில் வந்த 4 பேர் பட்டறை முன்பு சிறுநீர் கழித்தனர். இதை வெங்கடேசன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் அவரை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மது போதையில் வெங்கடேசனை தாக்கியது நரிமேட்டை சேர்ந்த வசந்த் (21), ஜபேதார்மேடு பசுபதி (28), கருக்கன்சாவடி நந்தகுமார் (27), ஜபேதார்மேடு சதீஷ் (25) என தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்கள்.