அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து வழக்கு
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பணி நீட்டிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த தங்க முனியாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பி. எச்டி., முடித்து விட்டு, பேராசிரியர் பணிக்காக காத்திருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் அதிகப்படியான பணியாளர்கள் நியமனம் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை அரசு ஏற்றது. அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கும் அரசு பல நிர்வாகிகளை நியமித்தது. அங்கு 370 உபரி ஆசிரியர்கள் விதிகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து 370 உபரி ஆசிரியர்களை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களின் பணியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல.
கேள்விக்குறியான எதிர்காலம்
ஏற்கனவே என்னைப்போன்ற பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு செய்ததால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களின் பணியை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே பணியமர்த்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.