ஊராட்சி தலைவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: மகன்களை அறையில் அடைத்து வைத்த 11 பேர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மகன்களை அறையில் அடைத்து வைத்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-01 15:49 GMT

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ஜெகதீசன் (60). இவர் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றிற்கு கற்களால் வேலி அமைக்கும் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கும், தொழில் செய்யவும் பல்வேறு இடங்களில் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் கடன கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும் இவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று ஜெகதீசன் திடீரென இறந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஈமச்சடங்குகளை செய்து சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இறுதி சடங்குகளை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மகன்களை ஒரு தனி அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின் மகன்களை விடுவித்தனர். பின்னர் உடலை போலீஸ் பாதுகாப்புடன் பாளையம்புதூருக்கு உடலை அடக்கம் செய்ய அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்