குலதெய்வம் குறித்து தவறாக பேசியதால் தச்சு தொழிலாளி அடித்துக்கொலை

சுசீந்திரம் அருகே குலதெய்வம் குறித்து தவறாக பேசியதால் தச்சு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-14 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே குலதெய்வம் குறித்து தவறாக பேசியதால் தச்சு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பர்னிச்சர் கடையில் வேலை

திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூர் காந்திசிலை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் பாலமுருகன் என்ற பாலன் (வயது35), தச்சு தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பார்கவி நகரில் கண்ணன் (45) என்பவரின் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இங்கு பர்னிச்சர் பொருட்கள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இதே கடையில் கோட்டார் இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவை சேர்ந்த கணேஷ் (39) என்பவரும் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் வேலை முடிந்து இரவு கடையிலேயே தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் கடை உரிமையாளர் கண்ணன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது, கணேசின் நண்பர் பட்டாரியார் நெடுந்தெடுவை சேர்ந்த ஜெகதீஷ் (31) என்பவர் மது பாட்டில்களுடன் கடைக்கு வந்தார்.

மது போதையில் மோதல்

பின்னர் பாலமுருகன், கணேஷ், ஜெகதீஷ் ஆகிய 3 பேரும் கடையில் அமர்ந்து ஒன்றாக மது குடித்தனர். அப்போது பாலமுருகன் சுடலைமாடசாமி மற்றும் இசக்கி அம்மன் கோவில்களை பற்றி தவறாக பேசினார். இதைகேட்டு ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் கணேஷ் 'எங்கள் குலதெய்வத்தை பற்றி நீ எப்படி தவறாக பேசலாம்' என கேட்டனர். அதற்கு பாலமுருகன் 'அப்படி தான் பேசுவேன்' என கூறினார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசும், கணேசும் சேர்ந்து கடையில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பாலமுருகனை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

அப்போது வீட்டுக்கு சென்றிருந்த கடை உரிமையாளர் கண்ணன் அங்கு வந்தார். அங்கு பாலமுருகனை 2 பேர் சேர்ந்து தாக்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே விரைந்து சென்று ஜெகதீசையும், கணேசை தடுத்து நிறுத்தி விலக்கி விட்டார்.

பரிதாப சாவு

தொடர்ந்து ரத்த காயத்துடன் கிடந்த பாலமுருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கண்ணன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் ஜெகதீஷ், கணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடைேய மோதலில் கணேஷ் கட்டையால் தாக்கிய போது குறிதவறி ஜெகதீசின் தலையில் பட்டதால் அவரும் காயமடைந்து இருந்தார். இதனால் ஜெகதீசை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

உறவினர்கள் கதறல்

பாலமுருகன் இறந்த சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்