ஜருகுமலையில் சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்-வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து

ஜருகுமலையில் சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

Update: 2023-01-26 22:38 GMT

பனமரத்துப்பட்டி:

வளைகாப்பு நிகழ்ச்சி

சேலம் அம்மாபேட்டையில் வரகம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகள் ராஜி (வயது 20). இவருக்கு பனமரத்துப்பட்டியை அடுத்த ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடந்தது.

இதில் கலந்து கொள்ள வெள்ளையன் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு சரக்கு வேன் ஒன்றில் ஜருகுமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேனில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

15 பேர் காயம்

வேன் ஜருகுமலை மேலூர் கீழூர் பிரிவு பகுதியில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்து அபய குரல் எழுப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அரப்புளியம்மாள் (54), பெருமாள் (17), விஜயா (44), அரபுளிஸ்வரன் (57), பாப்பா (35), ராகவன் (9) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 9 பேர் லேசான காயம் அடைந்தனர்.

மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஜருகுமலையில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்