மின்சாரம் தாக்கி சரக்கு வேன் டிரைவர் பலி
பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.
பாப்பாரப்பட்டி:
சரக்கு வாகன டிரைவர்
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள செக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 53), சரக்கு வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அருகே ஒரு திருமண விழாவுக்கு பூக்கள் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று விட்டு தனது வேனில் ஊருக்கு திரும்பினார்.
அப்போது செக்கோடி-தர்மபுரி சாலையில் ரோட்டோரம் இருந்த சேற்றில் சரக்கு வாகனத்தின் சக்கரம் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் என்பதால் வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ராஜா வீட்டுக்கு திரும்பினார்.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று காலை மீண்டும் அந்த இடத்துக்கு சென்று சேற்றில் சிக்கிய வாகனத்தை மீட்க முயற்சித்தார். அப்போது வாகனத்தை தொட்டவுடன் மின்சாரம் தாக்கி ராஜா தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் திருமண விழாவுக்கு போடப்பட்ட சீரியல் செட் மின்விளக்கின் மின்கம்பி வாகனத்தின் மீது பட்டதால் மின்சாரம் தாக்கி டிரைவர் ராஜா இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான டிரைவர் ராஜாவுக்கு ஜெயந்தி (48) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.