குளித்தலை அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம்

குளித்தலை அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-25 18:49 GMT

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்

குளித்தலை அருகே பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் மனைவியான நதியா (24), அண்ணன் மகளான கவிநயா (2) ஆகியோருடன் குளித்தலை அருகே சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மேலபணிக்கம்பட்டி - கணக்கப்பிள்ளையூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் சென்ற தங்கமணி, நதியா, கவிநயா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும், பின்னர் தொட்டியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி சாவு

குளித்தலை அருகே உள்ள கீழஊத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (54), விவசாயி. இவர் குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டியில் இருந்து பேரூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த பரளியைச் சேர்ந்த தீபக் என்பவரின் மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளைச்சாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்