விடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு

சுவரில் தலைவர்களின் ஓவியங்கள் வரைந்தும், விடுமுறை நாட்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

Update: 2022-10-08 18:45 GMT

பொள்ளாச்சி

சுவரில் தலைவர்களின் ஓவியங்கள் வரைந்தும், விடுமுறை நாட்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

சுவரில் ஓவியம்

விடுமுறை நாட்கள் என்றால் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழிக்க வேண்டும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இதற்கு மத்தியில் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றி காட்டி உள்ளனர், பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள். 75-வது சுதந்திர தின அமுத விழாவையொட்டி பள்ளி வளாகம், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதற்கு விடுமுறை நாட்களில் மாணவிகள் காலை, மாலையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் எஸ்.ஏ.மணிகண்டன், ஏ.மணிகண்டன், சிவபிரேம் ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொண்டு பள்ளி சுவரில் சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை அவர்களே தத்ரூபமாக வரைந்து வருகின்றனர். விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றிய மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் பாலமுருகன் ஆகியோர் தினமும் நேரில் சென்று ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஓவியம் வரையும் மாணவர்கள் கூறியதாவது:-

உண்டியலில் சேர்த்த பணம்

அப்பா, அம்மா கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைக்கும் பழக்கம் உள்ளது. சுற்றுலா செல்ல வேண்டும் அல்லது ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது உண்டியலை திறந்து அந்த பணத்தை எடுத்து செலவழிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை உண்டியல் பணத்தை கொண்டு பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஏற்கனவே பேப்பரில் ஓவியம் நன்றாக வரைவோம். இதனால் ஆசிரியர்களிடம் சுவற்றில் சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை வரையலாமா? என்று கேட்டோம். உடனே ஆசிரியர்கள் நீங்கள் ஓவியம் வரையுங்கள் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்றனர். அதன்பிறகு உண்டியல் பணத்தால் பிரஸ், பெயிண்டு வாங்கி ஓவியம் வரைந்து வருகின்றோம். மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி, ஜான்சி ராணி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், அம்பேத்கர் உள்பட 26 பேரின் ஓவியங்களை வரைந்து, அவர்கள் குறித்தும் அருகில் எழுதுகின்றோம். தினமும் பள்ளிக்கு வரும் போது நாங்கள் வரைந்த ஓவியத்தை பள்ளி சுவரில் பார்ப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மரக்கன்றுகள் பராமரிப்பு

மாணவிகள் கூறியதாவது:-

சுதந்திர தின விழாவையொட்டி 75 மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரித்து வருகின்றோம். இதற்கிடையில் விடுமுறை நாட்களில் பெற்றோர் சொந்தகாரர்கள் வீடுகளுக்கு செல்லுமாறு கூறினார்கள். மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்றால் வாடி விடும் என்பதால் விடுமுறை நாட்களில் எங்கும் செல்லவில்லை. தினமும் காலை, மாலை நேரங்களில் குடத்தில் தண்ணீர் கொண்டு மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகிறோம். விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றியதால் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் பள்ளிக்கு பெருமை கிடைப்பதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தவறான பாதை

பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:-

தற்போதை நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. செல்போனில் கேம் விளையாடுவது போன்ற செயல்களால் மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் செல்போனுக்கு அடிமையாகுவதை தடுக்கவும், அந்த நாட்களை பயனுள்ளதாக மாற்றவும் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாணவிகள் மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி காலை, மாலையில் பராமரித்து வருகின்றனர். மாணவர்களும் பள்ளி சுற்றுசுவரில் சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை வரைந்து வருகின்றனர். மாணவ-மாணவிகள் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்