சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-06-13 14:23 GMT

போடிப்பட்டி

தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதியில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.

சாலைகள் சேதம்

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இந்தநிலையில் பல இடங்களில் சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பலவிதமான கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து சாலை ஓரங்களில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது.மேலும் சாலை ஓர மழைநீர் வடிகால்கள் மூடப்படுவதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு சாலையில் வழிந்தோடுகிறது.இது சாலைகள் சேதமடைய காரணமாகிறது. கழிவுகளுக்கு அவ்வப்போது தீ வைக்கப்படுவதால் எழும் புகை மூட்டம் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை உண்டாக்குகிறது.

நடவடிக்கை

சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டாமல் தடுப்பது யார்? அவற்றை அப்புறப்படுத்துவது யார்? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. அந்த பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உள்ளதா? அல்லது நெடுஞ்சாலைத்துறைக்கு உள்ளதா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இதனால் இரண்டு துறைகளும் கண்டுகொள்ளாமல் சாலை ஓரங்கள் அனைத்தும் குப்பைத் தொட்டிகளாக மாறி வருகிறது. ஒருசில பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் குடியிருப்புகளில் சேகரிக்கும் குப்பையை சாலை ஓரங்களில் கொட்டும் அவலமும் அரங்கேறுகிறது. இதனால் மடத்துக்குளம் உட்பட பல நகரங்களின் நுழைவுப்பகுதி குப்பை மலையாகவே உள்ளது. எனவே மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்