திண்டுக்கல்லில் சிவசேனா மாநில அமைப்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு
திண்டுக்கல்லில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவசேனா அமைப்பாளர்
சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளராக இருப்பவர் சி.கே.பாலாஜி (வயது 52). இவர், திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர், குடும்பத்துடன் மதுரைக்கு காரில் சென்றுவிட்டார். அப்போது வீட்டின் முன்பு மற்றொரு காரை நிறுத்தி இருந்தார்.
பின்னர் மதுரைக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். இதற்கிடையே நேற்று காலை எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அவர் மதுரைக்கு சென்ற போது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் காரின் முன்பகுதியில் சிவசேனா கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்த கம்பி வளைந்து இருந்தது. மேலும் அதில் கட்டியிருந்த கொடி, அதற்கு மேல் இருந்த சூலாயுதம் ஆகியவற்றை காணவில்லை.
மர்ம நபர்கள் கைவரிசை
இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் சி.கே.பாலாஜி குடும்பத்துடன் மதுரைக்கு சென்றதை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் இரவு சுமார் 7 மணிக்கு அங்கு வந்து, கார் கண்ணாடியை சேதப்படுத்தி, கொடி மற்றும் சூலாயுத்தை திருடி சென்றது தெரியவந்தது. ஆனால் தெருவிளக்கு எரியாததால் மர்ம நபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாக இல்லை. இதனால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளரின் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.