குன்றத்தூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - காயங்களுடன் வாலிபர் உயிர் தப்பினார்

குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காயங்களுடன் வாலிபர் உயிர் தப்பினார்.

Update: 2022-12-08 09:23 GMT

குன்றத்தூரை அடுத்த நல்லூர் புதுப்பேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவர், திருமுடிவாக்கத்தில் சொந்தமாக கம்பெனி வைத்து உள்ளார். நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற இவரது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் நேற்று மாலை தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வந்தபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து விட்டு அதே வேகத்தில் சாலையாரம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காருக்குள் லேசான காயங்களுடன் சிக்கி தவித்த சங்கரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ேபாலீசார், கால்வாய்க்குள் பாய்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும் விசாரணையில் சங்கர், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருந்துள்ளார். அதே தூக்க கலக்கத்தில் காரை ஓட்டிவந்தபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்