கார்-மோட்டார் சைக்கிள மோதல்; வாலிபர் சாவு
கயத்தாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றதை நண்பரிடம் நேரில் தெரிவிக்க சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து போயுள்ளார்.
பிளஸ்-2 தேர்ச்சி
விருதுநகர் மாவட்டம் ரெட்டிஇனாம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சந்தன கருப்பசாமி (வயது 17). பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த வாரம் வெளியான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற சந்தோஷத்தை கயத்தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்திலுள்ள தனது நண்பருக்கு நேரில் தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்து ெகாண்டிருந்தார்.
கார் மோதியது
அப்போது தளவாய்புரம் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். சாலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கயத்தாறு போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.