ஆழியாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி உள்பட 2 பேர் பலி

ஆழியாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-10-05 18:45 GMT

பொள்ளாச்சி

ஆழியாறு அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

முறுக்கு வியாபாரி

கோவை ஜவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 43). இவர், வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு கோவை நோக்கி நேற்று முன்தினம் காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, வால்பாறைக்கு சுற்றுலா செல்ல திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி ஷேக்முகமது (40) மற்றும் துபாயில் பணிபுரிந்து வந்த இதயத்துல்லா (வயது 32) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வால்பாறை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். வால்பாறை சாலையில் உள்ள ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஷேக்முகமது மற்றும் இதயத்துல்லா ஆகியோர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனர். இதில், மிகவும் படுகாயம் அடைந்த ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இதயத்துல்லாவை மீட்ட அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்கை்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் விபத்தில் இறந்த ஷேக் முகமதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இதயத்துல்லா பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக கதிரவனை கைது செய்தனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் ஆழியாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்