தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். சாக்கு வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மகள் வித்யா (வயது 19). இவர் தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வித்யா நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து மொபட்டில் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் கல்லூரி முடிந்ததும் மொபட்டில் வீடு திரும்பினார்.
அப்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே வந்த போது மதுரையில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரை கோவையை சேர்ந்த அஸ்வின் (30) என்பவர் ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக வித்யா ஓட்டி வந்த மொபட் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மொபட்டுடன் கீழே விழுந்த வித்யா பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வித்யாவுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த அஸ்வின் (30) என்பவரை தாராபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.