கார் டிரைவர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை- பணம் திருட்டு

பேரணாம்பட்டில் கார் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-06 18:21 GMT

கார் டிரைவர்

பேரணாம்பட்டு டவுன் இப்ராஹிம் மஜித் முதல் தெருவை சேர்ந்தவர் தப்ரேஸ் (வயது 28), கார் டிரைவர். இவர் தனது மனைவி அஸ்பியா தபசும் மற்றும் 2 குழந்தைகளுடன் கடந்த 3-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வாணியம்பாடியில் நடந்த தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். பின்னர் 5-ந் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அறைக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் திறந்திருந்தது.

நகை, பணம் திருட்டு

அதில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் தப்ரேஸ் புகார் செய்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்