கார் டிரைவர் கடத்தி வெட்டிக்கொலை
தளி அருகே கார் டிரைவரை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசி சென்றது.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே கார் டிரைவரை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசி சென்றது.
வாலிபர் கொடூர கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே பின்னமங்கலம் அடுத்துள்ளது எலேசந்திரம் கிராமம். இங்குள்ள சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கழுத்து, தாடை உள்பட பல இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டு இருந்தது.
கார் டிரைவர்
இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டதோகூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் என்பவரின் மகன் சாந்தகுமார் (வயது 30) என்றும், கார் டிரைவர் என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அஸ்வத் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுபாரில் தகராறு
அப்போது சாந்தகுமார், கார் டிரைவராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொட்டதோகூர் பகுதியில் உள்ள மது பார் ஒன்றிற்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவருக்கும், அங்குள்ள ரவுடி ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அந்த ரவுடி சாந்தகுமாரை தாக்கினார்.
இது தொடர்பாக சாந்தகுமார், அந்த ரவுடி மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் மனுவை வாபஸ் பெற சொல்லி அந்த ரவுடி சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். முதலில் வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிய சாந்தகுமார் நேற்று முன்தினம் புகார் மனுவை பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வாபஸ் பெற்றார்.
கடத்தி கொலை
இதனிடையே நேற்று முன்தினம் முதல் சாந்தகுமார் மாயமானார். இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தளி அருகே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு ரவுடி தான் சாந்தகுமாரை தனது கூட்டாளிகளுடன் கடத்தி வந்து கொலை செய்து உடலை போட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர். தளி அருகே பெங்களூரு கார் டிரைவர் கடத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.