கார் மரத்தில் மோதி விபத்து; பார்வர்டு பிளாக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பலி

குற்றாலத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவா் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

குற்றாலம்:

நெல்லை சி.என்.கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவராக உள்ளார். இவரும், நெல்லை பாப்பா தெருவைச் சேர்ந்த லெனின் (39), நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (26), கோவை பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகியோரும் ஒரு சொகுசு காரில் நேற்று முன்தினம் இரவில் நெல்லையில் இருந்து குற்றாலத்திற்கு சென்றனர்.

பழைய குற்றாலம் அருவியில் குளித்து விட்டு நேற்று அதிகாலையில் காரில் நெல்லைக்கு புறப்பட்டனர். காரை சங்கர் ஓட்டினார். பழைய குற்றாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் வந்தபோது, ஒரு திருப்பத்தில் கார் அதிவேகமாக திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. சொகுசு கார் என்பதால் அதில் இருந்த விபத்து மீட்பு பலூன்கள் விரிந்தது. ஆனாலும் கார் அப்பளம் போல் நொறுங்கி, என்ஜின் கழன்று தனியாக சாலையில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த லெனின், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும். பலியான சங்கர் உடலையும் போலீசார் மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்