மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

அரவக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-29 17:34 GMT

அரவக்குறிச்சி,

கார் மோதல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் பிரபாகரன் (வயது 32). இவர் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரை ஓட்டி சென்றார்.அந்த கார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஜங்கால்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. முன்னால் அடையாளம் தெரியாத 23, 28 வயது மதிக்கதக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 வாலிபர்கள் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரபாகரன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

பின்னர் போலீசார் 2 வாலிபர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தில் இறந்த 2 வாலிபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்