மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - விவசாயி பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தென்னேரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது64) விவசாயி. இவர் இன்று சொந்த வேலை காரணமாக எலவனாசூர்கோட்டைக்கு சென்றார்.
வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அவருக்கு பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் வெங்கடேசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் இறங்கியது. ஆனால் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெங்கடேசன் மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் கோவை வடமதுரையை சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி (29) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.