மொபட் மீது கார் மோதல்; அ.தி.மு.க. கவுன்சிலர் பலி
சாத்தனூர் அருகே மொபட் மீது கார் மோதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தனூர் அருகே மொபட் மீது கார் மோதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.முருகன் (வயது 45). இவர் அந்த பகுதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். இந்த நிலையில் முருகன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று தன்னுடைய நிலத்தில் வேலை செய்வதற்காக ஆட்களை தேர்வு செய்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
புளியந்தோப்பு என்ற இடத்தின் அருகே வந்த போது தண்டராம்பட்டில் இருந்து செங்கம் நோக்கி எதிரே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று திடீரென மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முருகன் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
கார் டிரைவர் தலைமறைவு
விபத்து நடந்த உடன் கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சாத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சென்று முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
இறந்த அ.தி.மு.க. கவுன்சிலர் முருகனுக்கு பிரபாவதி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்களும், 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.