மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தம்பதி பலி

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர். தாய்-மகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-07-03 18:43 GMT

தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி கல்யாணி (45). நேற்று காலை செல்வராஜ், தனது மனைவியை திருச்சிக்கு கட்டிட வேலைக்கு அனுப்புவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக நின்றுள்ளார்.

தம்பதி பலி

அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து செல்வராஜ், கல்யாணி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் காரில் இருந்த மதுரை ஊத்தன்குடியை சேர்ந்த பொன்னையா மனைவி சித்ரா (44), இவரது மகள் சரண்யா (23), மலைச்சாமி மகன் காசிநாதன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த பொன்னையா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சோகம்

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் செல்வராஜ், கல்யாணி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்