மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி
நெல்லை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே தருவையைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 35). நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (35). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவில் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ஆரைக்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் ஆரோக்கியம், மாணிக்கம் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த ஆரோக்கியம், மாணிக்கம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.