மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி

ராமநத்தம் அருகே உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2022-05-29 19:01 GMT

ராமநத்தம், 

பெரம்பலூர் மாவட்டம் பெருநிலா கிராமத்தை சேர்ந்தவர் அங்கான் மகன் பெரியசாமி (வயது 40). இவர் அதேஊரை சேர்ந்த உறவினர்களான பழனிமுத்து மகன் வேலு (37), பதினெட்டான் மகன் வேலு(70) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி நாங்கூர் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். கொரக்காவடி கிராம சாலையில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பெரியசாமி, வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு, ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் லேசான காயங்களுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்